கொரோனா நோய்க்கிருமி:
இத்தீநுண்மிகள் மனிதர்களுக்கு சுவாச நோயினை ஏற்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை ஆகும். இவை பெரும்பாலும் மிதமானவையாகவும் சில நேரங்களில் ஆபத்தானவையாகவும் இருக்கும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.
தடுப்பு நடவடிக்கை :
இந்நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஆறு மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென மாநில அரசு அறிவித்துள்ளது.
கூனான்டியூர் ஊராட்சி:
இது குறித்து கூனான்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் ஊராட்சி மக்கள் நலன் கருதியும் அரசிற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையிலும் உடனடி அறிக்கை ஒன்று வெளியிட்டார்.
அறிக்கை :
கூனான்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகிய கூனான்டியூர், கீரைக்காரணூர், பூனகுண்டு காடு, சாமக்கல் காடு, மூர்த்திக்காடு, கொண்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆறு பாய்கின்றது. மேற்கண்ட பகுதியில் அரசிற்கு சொந்தமான வனத்துறை காடுகள் நிரம்பியுள்ளதால் வெளியூர் நபர்கள் பொழுது போக்கு குளியல் மற்றும் மீன் பிடித்தல் போன்ற பலகாரணங்கள் கருதி தினமும் பல ஊர்களைச் சேர்ந்த மக்கள் கூனான்டியூர் ஊராட்சிக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
தொற்று நோயின் பாதிப்பு கருதியும் கூனான்டியூர் ஊராட்சி மக்கள் நலன் கருதியும் அரசு அறிவித்த 144 தடை உத்தரவை ஏற்று மேற்கண்ட வெளியாட்கள் குறிப்பிட்ட காலம் வரை கூனான்டியூர் ஊராட்சி எல்லைக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறே கூனான்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் 144 விதியின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட மருத்துவம், கல்வி, வங்கி, அத்தியாவசிய தேவை தவிர பிற இதர காரணங்கள் கருதி ஊராட்சிக்கு வெளியே செல்லக்கூடாது என்றும் அரசு கூறிய தடை உத்தரவு முடிவுற்ற பிறகு தத்தம் இயல்பு வாழ்க்கையை கடைபிடிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இம்முடிவு முழுதும் மக்கள் நலனுக்கே.
இவ்வாறு தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் கூறியுள்ளார்.