koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Tuesday, October 3, 2017

இயல் - 1 , பாடம் - 1 (ஜோதிடம் அறிமுகம்)


இயல் – 1

I. ஜோதிடம் அறிமுகம்


 

ஜோதிடம்

ஜோதிடம் என்பது வானசாஸ்த்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களின் எதிர்காலத்தைக் கணிக்க உதவும் ஓர் தெய்வீக கலையாக தொன்று தொட்டு போற்றப்பட்டு வருகின்றது. கோள்கள்  வான் வெளியில் நகர்வதனால் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவற்றின் செயற்பாடுகளில் பலவிதமான இயற்கை நிகழ்வுகளால் மாற்றத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே ஜோதிடம் என்னும் சொல்லின் பொருளாகும்.

இந்திய ஜோதிடம்
இந்திய ஜோதிடம் பொதுவாக இந்து ஜோதிடம் என்றும், வேத ஜோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.
                                   
இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
ஐந்தாம் வேதம்
ஜோதிடம், வேதத்தின் ஐந்தாம் வேதமாக கருதப்படுகிறது. இது வேதங்களின் கண்களாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும் எப்போது, எவ்வாறு வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிக்க கணிதம் தெரிந்து வைத்திருப்பது கட்டாயாமாகும்.

கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம். ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.
மகாபாரத சகாதேவன்

                                   
இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பு முறையில் சிறந்தவர். இவர் குறித்து தந்த நாளில் குருசேத்திரப்போரை தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான கௌரவர்களே  இவரிடம் நாள்குறித்து சென்றதாக மகாபாரதம் கூறுகிறது.
கோள்களும் நட்சத்திரங்களும்
கோள்களும், விண்மீன் குழுக்களும் வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் ஜோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:

 சூரியனைக் சுற்றித்தான் கிரகங்கள் வலம் வருகின்றன. குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் சூரியனை வலப்புறமாகச் சுற்றிவருகின்றன. ஆனால் ராகு, கேதுக்கள் இடப்புறமாகச் சுற்றி வருகின்றன. சந்திரன் சூரியனைச் சுற்றுவதோடு பூமியையும் சுற்றி வருகிறது.
வான் மண்டலத்தில் முட்டை வடிவப் பாதையில் கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்றி வரும் பாதையில் தான் 27 நட்சத்திரங்களும் உள்ளன. வான் மண்டலத்தில் எண்ணற்ற கோடி நட்சத்திரங்கள் இருப்பினும் அஸ்வினி முதல் ரேவதி வரையிலும் உள்ள 27 நட்சத்திரங்கள் தான் ஜோதிட ரீதியாகக் கணக்கிடப்படுகின்றன.
இந்த 27 நட்சத்திரங்கள் உள்ள ஓட்டப் பாதையை 12 ராசிகளாகப் பிரிந்துள்ளனர். சந்திரன் இரண்டேகால் நாட்கள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார்.
  இந்தச் சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டே ஒருவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது. சூரியனை வைத்து லக்னத்தையும் சந்திரனை வைத்து ராசியும் கணிக்கப்படுகிறது.
ஜோதிட விதிப்படி நாழிகை கணக்கு முக்கியமானது. ஒரு நாள் என்பது 24 மணி நேரம். 24 மணி நேரம் என்பது 60 நாழிகை. ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகை எனக் கணக்கு கணிக்கப்படுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வரும்போது இரவு, பகல் உண்டாகிறது. பவுர்ணமி, அமாவாசையும் வருகிறது. இடைப்பட்ட சந்திரன் வளர்ந்து தேயும் நிலையில் உள்ள நாட்கள் திதிகள் என்று கணக்கிடப்படுகின்றன.
ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கப்பட்டு ஏழு நாட்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ராகு, கேதுக்களுக்கு மட்டும் எதுவும் தனியாக நாட்கள் பிரித்துக்கொடுக்கப்படவில்லை. இப்படிக் கிரகங்கள் சஞ்சரிக்கும் கால அளவுகளை ஒட்டியே கிழமைகள், திதிகள், வாரம், வருடம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
27 நட்சத்திங்கள்
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை 27 நட்சத்திரங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ராசி மண்டலம்
ராசி மண்டலத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற வரிசைமுறையில் 12 ராசிகள் வழங்கப்படுகின்றன.
ஒருவரது ஜாதகத்தில் லக்னம் எங்கு குறிக்கப்பட்டுள்ளதோ அதனை ஒன்றாம் வீடாகக் கொண்டு எண்ணுதல் வேண்டும். உதாரணமாக மேஷம் 1-வது வீடு எனக் கொண்டால் மிதுனம் 3-ம் இடம். சிம்மம் 5-ம் இடம். ராசி வேறு லக்னம் வேறு என்று ஜோதிடவியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீடு எதுவோ அதுவே அவரது ராசி வீடு.
சூரிய உதயாதி நாழிகை முதல் கணக்கிட்டு குழந்தை பிறந்த காலம் வரையுள்ள வித்தியாசத்தைக் கணக்கிட்டு, அந்த நேரத்தில் என்ன லக்னம் வருகிறதோ அதுவே அந்தக் குழந்தையின் லக்கினம்.
கேந்திர ஸ்தானங்கள்
கேந்திரம் என்பது முக்கியமான வீடுகளை குறிக்கும். அதன் அதிபதிகள் நல்ல நிலையில் இருப்பது மற்றும் இக்கேந்திர ஸ்தானங்களில் நல்ல கிரகங்கள் அமர்ந்திருப்பது சிறப்பு. லக்கினத்திற்கு 1, 4, 7, 10 – ஆம் வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் எனப்படும்.
திரிகோண ஸ்தானங்கள்
லக்னத்துக்கு 1, 5, 9-ம் வீடுகளுக்கு திரிகோண ஸ்தானங்கள் என்று பெயர். இதுவும் மிகப்பலம் வாய்ந்த வீடுகள் ஆகும். கேந்திர ஸ்தானாதிபதி திரிகோணத்திலோ திரிகோணாதிபதி கேந்திரத்திலோ அமர்ந்திருப்பது நல்லது.
துல்லியமாக ஒரு ஜாதகரின் பலனை அறிந்து கொள்வதற்கு முதலில் ராசி எது லக்னம் எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஜோதிடவியல் கூறுகிறது.
                                   

சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து அப்போதைய நேரத்துக்குக் கிரகங்கள் எங்குள்ளன என்று கண்டறிந்து பலன் சொல்லும் முறைக்கு கோட்சாரப்பலன் என்று பெயர். லக்னம் எங்கிருக்கிறதோ அந்த வீட்டை ஒன்றாவது வீடாகக் கொண்டு மற்ற வீடுகளை 2,3-ம் வீடுகள் என்று கணக்கிட்டு எந்த வீட்டு அதிபதி எங்கு இருக்கிறார்எப்படிப்பட்ட பலம் கொண்டு அமைந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து பிறகு அதற்கேற்ப பலனைக் கணிக்க வேண்டும்.
-------------------------------------------- ***** ---------------------------------------------

2 comments:

  1. நல்ல அறிமுகம். நன்றி.

    ReplyDelete
  2. ஐயா! வணக்கம்! மற்ற பகுதிகளை படிக்க தொடர்புகளை (link) அளிக்கவும். எளிமை & அருமை. தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி -
    சீனிவாசராகவன், மைசூர்.

    ReplyDelete